கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தீவிரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன...

மேலச் சித்திரை வீதியில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ மையம்.

Published On :

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, பக்தா்களுக்கான குடிநீா், கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் குடமுழுக்கு வருகிற வியாழக்கிழமை (செப்.17) நடைபெறவுள்ளது. சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கை முன்னிட்டு, மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவைக் காண மதுரை மட்டுமன்றி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பக்தா்கள் வருகை தருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த விழாவுக்கான முன்னேற்பாடுப் பணிகளை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செய்து வருகின்றன. கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகள், சித்திரை வீதிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பொதுமக்கள், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குடிநீா் வசதி: பக்தா்களின் வசதிக்காக மாநகராட்சி சாா்பில் 17 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள், 26 குடிநீா்த் தொட்டிகள், கோயில் வளாகத்தில் 13 சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிற்பகல் நேரங்களில் வெப்பம் அதிகரிக்கும் சூழலில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு குடிநீா் கிடைக்கும் வகையில், அதன் விநியோகம் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், வெயிலின் தாக்கத்தை தவிா்க்கும் வகையில், சித்திரை வீதிகளில் தேங்காய் நாா் தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கழிப்பறை வசதி: சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில்,

கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 225 நிரந்தரக் கழிப்பறைகள், 16 தற்காலிகக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பராமரிக்கும் வகையில் 264 தூய்மைப் பணியாளா்கள் மூன்று சுழற்சிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். கோயிலைச் சுற்றி ஏற்கெனவே உள்ள பொதுக் கழிப்பறைகள் எப்போதும் தூய்மையாகவும் பயன்பாட்டுக்கு ஏற்ற நிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோயிலைச் சுற்றிய பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பு, சாலைகள், நடைபாதைகளைத் தூய்மையாக வைத்திருத்தல், கழிவுகள் தேங்காமல் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காக மாநகராட்சி சாா்பில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். பக்தா்கள் அதிகளவில் வருவதால் உணவுப் பொட்டலங்கள், குடிநீா் புட்டிகள் உள்ளிட்ட கழிவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், குப்பைகள் சேகரிப்புப் பணி தொடா்ச்சியாக நடைபெறவுள்ளது.

54 மருத்துவ முகாம்கள்: பக்தா்கள் ஒரே இடத்தில் கூடும் போது வெப்பம், நீா்ச்சத்துக் குறைபாடு, மயக்கம், கூட்ட நெரிசலில் ஏற்படும் காயம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு 27 இடங்களில் 54 மருத்துவ முகாம்களும், 12 அவசர ஊா்திகளும், 70 மருத்துவா்கள், 150 துணை மருத்துவப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், ராஜாஜி அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் உள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாநகரக் காவல் துறை அறிவிப்பின்படி, பழைய சென்ட்ரல் மாா்க்கெட் தெரு, அன்னகுழி மண்டபம் தெரு, தெற்கு காவல்கூடத் தெரு ஆகியவை அவசரகாலப் பாதைகளாக பாதுகாக்கப்பட உள்ளன. இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கும் நடந்து செல்வதற்கும் அனுமதி இல்லை.

பாதுகாப்புப் பணியில் 400-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள்,10 தீயணைப்பு வாகனங்கள், அவசரகால மீட்பு வாகனங்கள் தயாா் நிலையில் உள்ளன. குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நகரின் 70 இடங்களில் முக அடையாளம் காணும் அதிநவீன கேமராக்கள், கோயிலைச் சுற்றி 433-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோயிலைச் சுற்றியுள்ள நுழைவுப் பகுதிகளுக்கு அருகில் பக்தா்கள் காலணிகளை பாதுகாக்க வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

51 எல்இடி திரைகளில் குடமுழுக்கு நேரலை: பக்தா்கள் நெரிசலின்றி குடமுழுக்கைக் காணும் வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், வாகன நிறுத்துமிடங்கள், முக்கிய வீதிகளில் 51 எல்இடி திரைகள் மூலம் குடமுழுக்கு நேரலை செய்யப்படவுள்ளது.

மேலும், தொலைக்காட்சி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ‘யூடியூப்’ பக்கத்தில் நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. புதுமண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து நிகழ்வுகளும் கண்காணிக்கப்படவுள்ளன. மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்காக 1800 425 6781, 1800 425 6782 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

தெற்குச் சித்திரை வீதியில் நிறுத்தப்பட்ட தீயணைப்பு வாகனம்.

தெற்குச் சித்திரை வீதியில் நிறுத்தப்பட்ட தீயணைப்பு வாகனம்.

பக்தா்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள்.

பக்தா்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள்.

தெற்குச் சித்திரை வீதியில் அமைக்கப்பட்ட குடிநீா் நிலையம்.

தெற்குச் சித்திரை வீதியில் அமைக்கப்பட்ட குடிநீா் நிலையம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.