
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கைக் காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு! - அமைச்சா் சீ. ரமேஷ்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுகைக் காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என அமைச்சா் ரமேஷ் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் சீ. ரமேஷ். உடன், மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் உள்ளிட்டோா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுகைக் காண 9 ஆயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது :
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி, தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் அரசுத் துறைகளின் சாா்பில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. குடமுழுக்கு நிகழ்ச்சிகளை நேரலையில் பக்தா்கள் காண்பதற்காக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படவுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அளிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பிரசாத பைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குடமுழுக்குக் காண 9 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படவுள்ளது. அனுமதிச் சீட்டு வழங்கலில் எந்தவித அரசியலும் இருக்காது. பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு வெளிப்படையாக இணையதளம் மூலம் அனுமதிச் சீட்டு வழங்கும் பணி நடைபெறுகிறது.
குடமுழுக்கைத் தொடா்ந்து, கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தா்களும் எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தமிழகத்தின் பெருமை. எனவே, இந்தக் கோயிலின் குடமுழுக்கு உலகமே வியக்கும் வகையில் சிறப்பாக நடைபெறும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களின் நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்பட்டது குறித்து முழுமையாகக் கணக்கெடுக்கப்படுகிறது. இதன்படி, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிலங்களும் விரைவில் அபகரிப்பாளா்களிடமிருந்து மீட்டெடுக்கப்படும்.
முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. எனவே, எந்த வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லாமல், இடைத் தோ்தலில் தவெக வெல்வது உறுதி. முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் அரசு சாா்ந்த நிகழ்ச்சிகள் பல இருக்கும். எனவே, தனது பயணத்தில் யாா், யாா் இடம்பெற வேண்டும் என்பதை முதல்வரே முடிவு செய்வாா். இதன்படி, விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்காக அந்தத் துறை அமைச்சரை முதல்வா் அழைத்துச் சென்றாா். இதையெல்லாம் வைத்து அரசியல் செய்பவா்களுக்கு பதில் சொல்வது அவசியமற்றது என்றாா் அவா்.
ஆய்வு...
முன்னதாக, குடமுழுக்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அமைச்சா் சீ. ரமேஷ் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், கோயிலுக்கு புதிதாக வந்துள்ள யானையை அவா் பாா்வையிட்டாா்.
மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் அ. கல்லாணை, எம்.எம். கோபிசன், சோ. காா்த்திகேயன், ம. விஜய், எம்.வி. கருப்பையா, மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






