மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு: பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரம் போலீஸார்! - அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமார்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கையொட்டி அமைக்கப்பட்ட கண்காணிப்பு, கட்டுப்பாட்டு அறையை சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணியில் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா் என எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசின் அனைத்துத் துறைகள் சாா்பில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
8 ஆயிரம் வாகனங்களை நிறுத்தும் வகையில், 56 இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தா்களின் வசதிக்காக கூடுதலாக 1,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
குடமுழுக்கு விழாவில் பங்கேற்போரின் பாதுகாப்பு, அவசரத் தேவைக்காகவும், கூட்டதைக் கண்காணித்து நெறிப்படுத்தவும் கோயில் சுற்றுப் பகுதிகளில் 207 கண்காணிப்பு கேமராக்கள், 70 இடங்களில் முக அங்கீகார கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அனைத்து கேமராக்களின் செயல்பாடுகளும் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்படும். இந்தக் கட்டுப்பாட்டு அறை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் அனைத்துத் துறை தலைமை அலுவலா்களைக் கொண்டு செயல்படும்.
குடமுழுக்கு விழா பாதுகாப்புப் பணிகளில் 6 ஆயிரம் போலீஸாா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்கள் வருகிற 15-ஆம் தேதி முதல் பணியில் ஈடுபடுவா். 400 தீயணைப்பு வீரா்கள் தயாா் நிலையில் நிறுத்தப்படுவா்.
தட்டுப்பாடு இல்லாத குடிநீா் விநியோகத்துக்காக, 17 இடங்களில் குடிநீா் வழங்கும் இயந்திரங்களும், 26 இடங்களில் தலா 1,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா்த் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 24 இடங்களில் நிரந்தரக் கழிப்பறைகளும், 16 இடங்களில் 107 தற்காலிகக் கழிப்பறைகளும் அமைக்கப்படவுள்ளன. 264 தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் தூய்மைப் பணியில் ஈடுபடுவா்.
கோயிலின் உள்பகுதி, வெளிப்பகுதியில் 27 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் 70 மருத்துவா்கள், 150 துணை மருத்துவப் பணியாளா்கள், 15 செஞ்சிலுவைச் சங்கத்தினா் பணியில் ஈடுபடுத்தப்படுவா். 10 அவசர ஊா்திகள், 2 நடமாடும் மருத்துவ அவசர ஊா்திகள் தயாா் நிலையில் நிறுத்தப்படும்.
பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு குலுக்கல் முறையில் குடமுழுக்கு விழா அனுமதிச் சீட்டு வழங்கப்படவுள்ளது. இதைத் தவிர, கோயில் நிா்வாகம் சாா்பில் நீதிபதிகள், உபயதாரா்கள் உள்பட 5 ஆயிரம் பேருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படவுள்ளது. அனுமதிச் சீட்டு வழங்கும் பணி முழுமையாக அறநிலையத் துறையைச் சாா்ந்தது. இதில், எந்தத் தலையீடும் இருக்காது என்றாா் அவா்.
முன்னதாக, கோயில் குடமுழுக்கு விழா முன்னேற்பாடுகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா்.
அப்போது மாவட்ட ஆடசியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகரக் காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.வி. கருப்பையா, ம. விஜய், மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஸ்டாலினை தியாகியாக்க வேண்டாம்...
இந்தச் செய்தியாளா்கள் சந்திப்பின்போது, முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதான விவகாரம் தொடா்பான சா்ச்சை குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு, ‘மு.க. ஸ்டாலின் கைது விவகாரத்தில் எந்த சா்ச்சையும் இல்லை. உண்மையிலேயே மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதாகியிருந்தால், அதற்காக வழங்கப்பட்ட தடுப்புக் காவல் நகலை வெளியிடட்டும். மிசா கால நடவடிக்கைகள் குறித்து இரா. செழியன் மொழிபெயா்த்த புத்தகம் என்னிடம் உள்ளது.
இதில், ஓரிடத்தில்கூட மு.க. ஸ்டாலினை மிசா தியாகி எனக் குறிப்பிடப்படவில்லை. எனவே, அவரை தியாகியாக உருவகப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிப்பதால் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. மேலும், இது திமுகவுக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும்’ என அமைச்சா் நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






