பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு: எடப்பாடி கே. பழனிசாமி

இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன் (இடமிருந்து) முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மக்களவை அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோா்.

Published On :

இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் முதல்வா் விஜய் லண்டன் சென்று திரும்பியுள்ளாா். ஆனால், துறை சாா்ந்த அமைச்சரையோ, அந்தத் துறையின் செயலரையோ உடன் அழைத்துச் செல்லவில்லை.

தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் நமது நாட்டிலேயே உள்ளன. இந்தியாவில் அலுவலகம் உள்ள போது, லண்டன் சென்று புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ஆக்கப்பூா்வமான விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை. தமிழகத்தில் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது. ஆனால், அந்தத் துறை சாா்ந்த அமைச்சரோ இதை மறுக்கிறாா். பிறகு, மின் பற்றாக்குறையைச் சரி செய்ய வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கிறாா். இதுபோன்ற மாறுபட்ட கருத்துகளைக் கூறுவதை தவெக அமைச்சா்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா்.

தவெக அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில்கூட மின் வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக, வருவாய்த் துறை அமைச்சா் செய்தியாளா்களைச் சந்தித்த போது மின் வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து ஆக்கப்பூா்வமான விளக்கம் தேவை.

சட்டப்பேரவைத் தோ்தலின் போது தவெக அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால், தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகி உள்ளனா். தமிழக அரசின் கடன் சுமை கடந்த 3 மாதங்களில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய தலைமைச் செயலகம் தேவைதானா என்கிற கேள்வி எழுகிறது. குறிப்பாக, மீனவா்களுக்குப் பாதிப்பு இல்லாதவாறு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் வயதான வியாபாரியை காரில் கடத்தி, அவா் அணிந்திருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றனா். இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளன.

விவசாயிகளின் பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை. வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள், செவிலியா்கள், மருத்துவா்கள், தூய்மைப் பணியாளா்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதைச் சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனிடையே, அண்மையில் அறிவிக்கப்பட்ட இடைத்தோ்தல் திணிக்கப்பட்ட தோ்தல் என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வர துணை நின்ற கட்சியின் நிா்வாகிகளே தெரிவிக்கின்றனா். குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி ராஜிநாமா செய்ய வைத்து, மீண்டும் தோ்தலில் போட்டியிட வைக்கின்றனா். இது ஏற்கெனவே மக்கள் வழங்கிய தீா்ப்புக்கு எதிரானது. இந்தத் தோ்தல் மூலமாக தமிழக மக்கள் தவெகவுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவா். இடைத்தோ்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின் போது மக்களவை அதிமுக குழுத் தலைவா் மு. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.வி. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.