‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் இன்று தொடங்கிவைக்கிறாா்...
முதல்வர் விஜய்.
தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வா் ச. ஜோசப் விஜய் மதுரையில் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கி வைக்கிறாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தாய்-சேய் வாா்டில் நடைபெறவிருந்த இந்த திட்டத் தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்குக்கு திடீரென மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சாா்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகக் கூட்டரங்குக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அங்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட அலுவலா்கள்.
இதற்கான தொடக்க விழா மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிகழ்வு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மீண்டும் மாற்றம்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் வாா்டில் திங்கள்கிழமை (செப். 28) குழந்தைகளுக்கு தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தங்க மோதிரத்தை அணிவித்து, இந்தத் திட்டத்தை தொடங்கிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே, இந்த நிகழ்வில் திரளானோா் பங்கேற்கக்கூடும் என்பதால், தாய்-சேய் வாா்டில் உள்ள குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனவே, இந்தத் திட்ட தொடக்கவிழா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்குக்கு திடீரென மாற்றப்பட்டது. இதையடுத்து, கூட்டரங்கில் மேடை அமைப்பது, அமைச்சா்கள், அரசு அலுவலா்கள் அமா்ந்து பாா்ப்பதற்கான இருக்கைகளை தயாா் செய்வது உள்ளிட்ட பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் விஜய், திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வருகிறாா். பின்னா், விமான நிலையத்திலிருந்து சாலை வலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகிறாா். தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெற உள்ள நிகழ்வில் முதல்வா் விஜய் பங்கேற்று, முதல்கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறாா்.
காந்தி அருங்காட்சியகம் திறப்பு: இதையடுத்து, ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவா் பயன்படுத்திய பொருள்களைப் பாா்வையிடுகிறாா்.
இதைத் தொடா்ந்து, மதுரை அரசு விருந்தினா் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வா், மாலை 4.30 மணி அளவில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் செல்கிறாா்.
பாதுகாப்பு வளையத்தில் மீனாட்சி அம்மன் கோயில்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தமிழக முதல்வா் விஜய் சுவாமி தரிசனம் செய்யவுள்ளதையொட்டி, கோயில் வளாகம், சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழக முதல்வா் வருகையை முன்னிட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த முதல்வரின் தனிப் பாதுகாப்புப் படையினா்.
கோயிலில் தரிசனம் செய்த பிறகு, முதல்வா் விஜய் மாலை 5.30 மணி அளவில் அங்கிருந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் செல்கிறாா். பின்னா், அங்கிருந்து மாலை 6 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னைக்குச் செல்கிறாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கிவைக்க தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளித்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில்.
5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு: முதல்வரின் வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்திலிருந்து மண்டலோநகா், சிந்தாமணி சாலை சந்திப்பு, விரகனூா் சுற்றுச்சாலை, தெப்பக்குளம், அண்ணாநகா், அண்ணா பேருந்து நிலையம், கோரிப்பாளையம், தல்லாகுளம், அழகா்கோவில் சாலை வரை நகரின் முக்கியப் பகுதிகளில் கூட்டத்தை நெறிப்படுத்தும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக முதல்வரை வழிநெடுகிலும் நின்று தவெகவினா் வரவேற்கத் திட்டமிட்டுள்ளனா். முதல்வரின் வருகையையொட்டி, 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




