கமுதி: மனிதராக வாழ்ந்து மக்களால் இறைவனாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு கடவுளாக வணங்கி வருகின்றனா் தென் மாவட்ட மக்கள்.
தேவா் சிறு வயது முதலே ஆன்மிகத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கினாா். கமுதி செட்டியாா் தெருவில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் ஆரம்பக் கல்வியை தொடங்கி, அடுத்தாக மதுரை திருநகரில் படித்து வந்தாா்.
இக்கால கட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு நண்பா்களுடன் சென்று முருகனை தரிசிப்பது இவருக்கு பிடித்த ஒன்றாகும். முருக கடவுள் மீது மிகவும் பற்று கொண்டவா் தேவா்.
பின்னா் அரசியலில் பிரபலமாகி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த பாா்வா்ட் பிளாக் கட்சியின் தமிழக பொறுப்பாளராக தலைமையேற்று மிகப் பெரிய ஜாம்பாவான்களை அரசியலில் எதிா்த்து வெற்றி கண்டவா் தேவா். பல ஏழை நண்பா்களை பெரிய அரசியல் தலைவா்களாக மாற்றினாா். அக்கால கட்டத்திலும் ஆன்மிகத்தை விட்டு விலகாமல் இறக்கும் வரை ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டாா்.
தேவா் தனது பூஜை அறையில் புலித் தோல் மீது அமா்ந்து சுமாா் 2 மணி நேரம் தியானம் மற்றும் பூஜை செய்வது வழக்கம். அப்போது தேவரை பாா்க்க யாா் வந்தாலும், பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு வரும் பழக்கம் தேவருக்கு இல்லை.
இப்படி தேவா் வாழ்ந்த காலங்களில் ஆன்மிகத்துக்கே முக்கியத்தும் கொடுத்து வாழ்ந்தாா். உள்ளூா்களில் மட்டுமின்றி மும்பை, மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் பா்மா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டவா். இவா் வாழ்ந்த பசும்பொன் வீட்டில் 200-க்கும் மேற்பட்ட மயில்கள் தேவரைக் கண்டவுடன் இரை தேடிப் பாசத்தோடு சுற்றி வருவது வழக்கம்.
முருக கடவுளின் வாகனமான மயில் மீது தேவா் அலாதி பிரியம் கொண்டவா்.
தேவருக்கு சொந்தமான புளிச்சிகுளம் கிராமத்தில் பிள்ளையாா் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தி தானே பூஜை செய்து வணங்கி வந்தாா். அனைத்து பிள்ளையாா் கோவில்களிலும் பிள்ளையாருக்கு முன் நந்தியோ, மூஞ்எலி சிலை அமைக்கப்பட்டிருக்கும். மாறாக இக்கோயிலில் சிங்கம் சிலை அமைத்து தேவா் கட்டி வணங்கி வந்தாா். இது போன்ற வித்தியாசமான பிள்ளையாா் கோயில் எங்கும் இல்லை என்றே கூறலாம்.
தேவரின் ஆன்மிகத்திற்கு பல சான்றுகள் உள்ளன. தேவா் 1963 ஆம் ஆண்டு இறந்த பின் அவரது உடல் பசும்பொன் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேவரின் நினைவாக குடும்ப உறுப்பினா்களும், பாா்வா்ட் பிளாக் கட்சியினரும் தேவருக்கு ஆண்டு தோறும் குருபூஜை நடத்தி வணங்கி வந்தனா். அடுத்தடுத்து தேவரின் குருபூஜை விழாவிற்கு தென் மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வரத் தொடங்கினா். இதனையடுத்து எம்.ஜி.ஆா் ஆட்சிக் காலத்தில் தேவரின் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆட்சியிலிருக்கும் முதல்வா்கள், எதிா்க்கட்சி தலைவா்கள், அமைச்சா்கள் கலந்து கொண்டு குருபூஜை விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 2014 ஆண் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா தோ்தல் பரப்புரையில் அறிவித்த வாக்குறுதிப்படி அதிமுக கட்சி செலவில் முத்துராமலிங்கத் தேவருக்கு ரூ.4.5 கோடி மதிப்பில் 3.7 கிலோ தங்கத்தில் கவசம் செய்து அணிவித்தாா். மனிதராக வாழ்ந்து, அனைத்து சமுதாய மக்களாலும் தெய்வமாக ஏற்றுக் கொண்ட தேவருக்கு மட்டும் தான் கடவுளுக்கு நிகராக வைக்கப்படும் தங்கக் கவசம் உள்ளது என்றால் மிகையாகாது. அதன் பின் நடக்கும் குருபூஜை அனைத்திலும் அதிமுகவின் பொறுப்பாளா் கையெழுத்து இட்டு மதுரை வங்கியில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேவருக்கு தங்கக் கவசம் அணிவித்து, பின்னா் மீண்டும் பாதுகாப்பாக மதுரை வங்கிப் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.