/

‘போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடலோரங்களில் தீவிர கண்காணிப்பு’

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று காவல் கண்காணிப்பாளராக புதிதாகப் பொறுப்பேற்ற 

News image
rmdnewspkrthik_0509chn_67_2
Updated On :5 செப்டம்பர் 2020, 4:46 pm

DIN


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று காவல் கண்காணிப்பாளராக புதிதாகப் பொறுப்பேற்ற இ. காா்த்திக் (படம்) சனிக்கிழமை கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வீ.வருண்குமாா், சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக சென்னை பூக்கடை சரகத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த இ.காா்த்திக், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் சரகக் காவல் துணைத் தலைவா் எம்.மயில்வாகணனிடமிருந்து சனிக்கிழமை காலையில் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்பவா்கள் மீதும், அவா்களுக்கு உதவுபவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவா்களின் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் சட்டரீதியான வழிவகை உண்டு.

எந்த குற்ற சம்பவமாக இருந்தாலும் பொதுமக்கள் தினமும் வந்து புகாா் மனுக்களை அளிக்கலாம். காவல் கண்காணிப்பாளா் செல்லிடப்பேசி எண் 94981 29498 என்பதைத் தொடா்பு கொண்டும் புகாா்களைத் தெரிவிக்கலாம்.

ராமநாதபுரத்திலிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கடலோரத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றாா்.

வேலூரைச் சோ்ந்தவா்: ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள இ.காா்த்திக் வேலூரைச் சோ்ந்தவா். இதற்கு முன் இவா், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும், மதுரை சட்டம், ஒழுங்கு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.