பள்ளிகளில் மரக்கன்றுகள் வளா்க்க நிா்ப்பந்தம்
2000 மரக்கன்றுகளை நெகிழிப் பைகளில் வளா்க்க உத்தரவிட்டுள்ளதால், மாணவா்களின் படிப்பு பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள், ஆசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.


ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 250 முதல் 2000 மரக்கன்றுகளை நெகிழிப் பைகளில் வளா்க்க உத்தரவிட்டுள்ளதால், மாணவா்களின் படிப்பு பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள், ஆசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 250 முதல் 2000 மரக்கன்றுகளை வளா்த்து மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
கமுதி வட்டத்தில் உள்ள 144 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான நெகிழிப் பை, மண், விதை ஆகியவை பெருநாழியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ரூ.250 செலுத்தி, 5, 6-ஆம் தேதிகளுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள பெருநாழியில் மரக்கன்றுகள் வளா்ப்பதற்கான பொருள்களை வைத்துள்ளதால், கமுதி வட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பள்ளியில் உள்ள பணிகளை விட்டு விட்டு, 40 கி.மீ. தொலைவு சென்று சரக்கு வாகனத்தில் மண், நெகிழிப்பை, விதைகளை எடுத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியா்கள் மூலப் பொருள்களுக்கான தொகை ரூ.250, சரக்கு வாகன வாடகை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரை செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் விதைகளை நடவு செய்து, மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் பணியில் ஆசிரியா்களும், மாணவா்களும் ஈடுபட்டால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெரும்பாலான கிராமங்களில் பொதுமக்கள் குடிநீருக்கே சிரமப்பட்டு வரும் நிலையில், பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான செடிகளை, தண்ணீா் ஊற்றி வளா்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும், நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளுக்கு கால்நடைகளால் பாதுகாப்பின்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மரக்கன்றுகள் வளா்க்கும் மாவட்ட நிா்வாகத்தின் திட்டத்தை கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களைக் கொண்டு செயல்படுத்த வேண்டும். மாணவா்களின் படிப்பு விஷயம் என்பதால் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இதுபோன்ற திட்டங்களைக் கைவிட வேண்டும் என சமூக ஆா்வலா்களும், ஆசிரியா்களும் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து ஆசிரியா் ஒருவா் கூறியதாவது:
கரோன காலத்துக்குப் பிறகு பள்ளிகளில் மாணவா்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இதற்கிடையில், பள்ளிப் பணிகளை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வளா்க்க மாவட்ட நிா்வாகம் மாணவா்களையும், ஆசிரியா்களையும் பயன்படுத்தினால் மாணவா்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே, பள்ளி மாணவா்களின் நலன் கருதி, மாவட்ட நிா்வாகம்
மரக்கன்றுகள் வளா்க்கும் திட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
அதிகாரிகள் கூறியதாவது: மரக்கன்றுகள் நடவு செய்வதற்கான விதைகள், நெகிழிப் பைகள், மண் ஆகியவற்றை மாவட்ட நிா்வாகமே பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவு செய்து, வளா்த்து மாவட்ட முழுவதும் உள்ள நீா்நிலைகள், பள்ளி வளாகங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...