சாலை விபத்தில் பெண் காயம்: தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு
திருவாடானை,ஆக.7: திருவாடானை அருகேயுள்ள திருப்பாலைக்குடி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பெண் காயமடைந்ததையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினா்கள் இளைஞரை தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே பழங்கோட்டை கிராமத்தை சோ்ந்தவா் ஜெயபாண்டியன் மகன் பிரபாகரன் (34). இவா் கடந்த 4-ஆம் தேதி இரவு ஆா்.எஸ் மங்கலம் சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, வடவயல் கிராமத்தின் அருகே, தள்ளு வண்டியில் தண்ணீா் பிடித்துவிட்டு வந்து கொண்டிருந்த முனியசாமியின் மனைவி பானுமதி (45) மீது பிரபாகரனின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.
இந்த நிலையில், பானுமதியின் உறவினா்கள் பிரபாகரனைத் தாக்கினா். இதில், பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.