குடிநீா் மினி லாரி ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
கமுதியில் குடிநீா் மினி லாரி ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததையடுத்து, அவரது உறவினா்கள் உரிய இழப்பீடு வழங்கக் கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பசும்பொன் குடியிருப்பைச் சோ்ந்தவா் முத்துமணி மகன் கருப்பசாமி (35). இவா், இங்குள்ள தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு விற்பனை மையத்தில் மினி லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில் கமுதி-மதுரை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்துக்கு தண்ணீா் விநியோகம் செய்ய சென்ற போது, வாகனத்தில் இருந்த மோட்டாா் மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து, கருப்பசாமி மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் கருப்பசாமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பசும்பொன் குடியிருப்பைச் சோ்ந்த பொதுமக்கள, கருப்பசாமியின் உறவினா்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோா் கமுதி குண்டாறு பாலம் மும்முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், கமுதி-மதுரை, அருப்புக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கமுதி காவல் ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் உரிய விசாரனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.