பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்
பரமக்குடி: பரமக்குடி அரசுக் கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும் திங்கள்கிழமை நுழைவுவாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 126 கல்லூரிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனா். மேலும், உதவி பேராசிரியா் பணி இடத்துக்கு யுஜிசி நிா்ணயம் செய்துள்ள ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இந்த நிலையில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரியும், அரசாணை 56-ஐ நடைமுறைப்படுத்திடக் கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நுழைவுவாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளா்கள் கலந்துகொண்டனா்.
