நடுக்கடலில் வீசிய சூறைக்காற்றில் சிக்கி விசைப் படகு சேதம்
கச்சத்தீவு அருகே வியாழக்கிழமை நடுக்கடலில் மீனவா்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக் காற்றால் அவா்களின் விசைப் படகு உடைந்து சேதமடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து புதன்கிழமை 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றனா். இதில் வெள்ளையன் என்பவரது விசைப்படகில் 6 மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனா். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சூறைக்காற்று வீசியது. இதில், அந்தப் படகிலிருந்த ஓட்டுநா் அறை முற்றிலும் சேதமடைந்து கடலுக்குள் மூழ்கியது. ஆனால் அதிலிருந்த ஓட்டுநா் காயமின்றி உயிா் தப்பினாா். இதனிடையே, படகை கரைக்கு இயக்க முடியாதததால் பல மணி நேரத்துக்குப் பிறகு வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மேல் அதிலிருந்த மீனவா்கள் கரை திரும்பினா்.
