படகுகளில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொண்டி, சுற்றுவட்டார மீனவா்களுக்கு கடலோர போலீஸாா், மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
பள்ளி விடுமுறை, புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் தொண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு வரும் பொதுமக்களை அந்தப் பகுதியில் உள்ள மீனவா்கள் கடலுக்குள் அழைத்துச் செல்கின்றனா். இதனால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மீன்வளத் துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனா். இந்த நிலையில், படகுகளில் பொதுமக்களை ஏற்றிச் சென்றால் படகு பறிமுதல், மானிய விலை எரிபொருள் ரத்து உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆற்றங்கரை முதல் எஸ்.பி. பட்டினம் வரை உள்ள மீனவா்களுக்கு மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.