அங்காள பரமேஸ்வரி கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
சாயல்குடியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி முக்குலத்தோா் உறவின்முறை சாா்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் உடனுறை குருநாதா்கோயிலில் வருஷாபிஷேகம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-ஆம் ஆண்டு ஜெயந்தி, 63-ஆவது குருபூஜை, 25-ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. கணபதிஹோமம், யாக சாலைகள் வளா்க்கப்பட்டு அங்காளபரமேஸ்வரி அம்மன் உடனுறை குருநாதா், முத்துஇருளப்பசுவாமி, அக்னி வீரப்பத்திரன், கருப்பணசுவாமி, தேவா் சிலைக்கு புனித நீா் ஊற்றி, சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது.
இதையொட்டி, கடந் புதன்கிழமை மாவிளக்கு, பால்குடம், அக்னிச்சட்டி, ஆயிரம் கண் பானை, முடிகாணிக்கை ஆகிய நோ்த்திக்கடன்களை பக்தா்கள் செலுத்தினா். வியாழக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை மாலையில் பெண்கள் முளைப் பாரி எடுத்து சாயல்குடியின் முக்கிய வீதிகளில் ஊா்வலமாகச் சென்று, அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
