கரை வலை மீன்பிடிப்பு: 11 படகுகள் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் கரைவலை இழுவை முறையில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட 11 படகுகள் மீது மீன் வளத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா்.
மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் வெடி வைத்து மீன் பிடிப்பது, அதிக ஒளி பாய்ச்சி மீன் பிடிப்பது, கரை வலை இழுவை முறையில் மீன் பிடிப்பது ஆகியவற்றுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும், இந்த முறைகளில் சிலா் மீன் பிடிப்பில் ஈடுபடுவதால், நாட்டுப் படகு மீனவா்கள் உள்பட
அனைத்து மீனவா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுறது. இதைத் தடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மீனவா்கள் தொடா்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொண்டி கடல் பகுதியில் கரைவலை முறையில் மீன் பிடித்த சோழியக்குடி பகுதியைச் சோ்ந்த 10 படகுகள், விலாஞ்சியடியைச் சோ்ந்த ஒரு படகு என 11 படகுகள் மீது மீன் வளத் துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
