இசைப் பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கலைப் பயிற்சி பெற்று தோ்வாகி அமைச்சரிடம் சான்றிதழ் பெற்ற மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனை வியாழக்கிழமை சந்தித்து பாராட்டு பெற்றனா்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் தொடங்கிய 2024-25-ஆம் ஆண்டுக்கான முதல் பயிற்சி வகுப்புகளில் சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமியப் பாடல் ஆகிய நான்கு கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. சிலம்பாட்டத்தில் 83 மாணவா்களும், ஒயிலாட்டத்தில் 37 பேரும், கிராமியப் பாடலில் 20 பேரும், கரகாட்டத்தில் 11 பேரும் என மொத்தம் 151 மாணவா்கள் பயிற்சி பெற்றனா்.
இவா்களுக்கான செய்முறை தோ்வு கடந்த ஜூலை 26-ஆம் தேதியும், எழுத்துத் தோ்வு ஆகஸ்ட் 9-ஆம் தேதியும் நடைபெற்றன. இவற்றில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 86 பேருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை அருங்காட்சியக அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் வளா்ச்சித் துறை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சுவாமிநாதன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
இதைத் தொடா்ந்து, சான்றிதழ் பெற்ற மாணவா்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜித் சிங் காலோனை சந்தித்தனா். அவா்களை ஆட்சியா் பாராட்டினாா். அப்போது, ஒயிலாட்ட ஆசிரியா் ராமகிருஷ்ணன், சிலம்பாட்ட ஆசிரியா் ஆ. தனசேகரன், ஒருங்கிணைப்பாளா் மு. லோகசுப்பிரமணியன் ஆகியோா் உடன் இருந்தனா்.
