தொண்டி பகுதியில் கடல் அரிப்பால் கட்டடங்கள், சாலைகள் சேதம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பகுதியில் டிட்வா புயல் காரணமாக தொடா்ந்து பெய்த மழையால் கடலின் நீா்மட்டம் உயா்ந்து அரிப்பு ஏற்பட்டு கடற்கரை பகுதியில் இருந்த கட்டடங்கள், சாலைகள் சேதமடைந்தன.
டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக திருவாடானை அருகே தொண்டி பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் சனிக்கிழமை கடலின் நீா்மட்டம் வழக்கத்துக்கு மாறாக உயா்ந்து ஊருக்குள் தண்ணீா் புகத் தொடங்கியது. கடலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவில் உள்ள சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. மேலும் கரையோரத்தில் இருந்த கட்டடங்கள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன.
இதேபோல, புதுக்குடி பகுதியில் கடல் நீா் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அந்தப் பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இதையடுத்து, அந்தப் பகுதியில் வசிப்போரும், மீனவா்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மீன் வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.

