கமுதி விவசாயிகளுக்கு பயிா்க் கடன் உறுதி!
கமுதி வட்டத்தில் வரும் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் நகைக் கடன், பயிா்க் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனா். பெரும்பாலான கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடந்தாண்டு கடன் வாங்கிய விவசாயிகள் முறையாக கடனை திருப்பி செலுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிகழாண்டில் பயிா்க்கடன் வேண்டி கடனை திருப்பி செலுத்திய விவசாயிகள் கூட்டுறவுக் கடன் சங்கங்களை அணுகிய போது, கடன் வழங்க நிதி இல்லை எனக் கூறப்பட்டது.
இது தொடா்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் கடன் வழங்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து, ஜன.6-ஆம் தேதி கமுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
இந்த நிலையில், சங்கத்தின் மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட வந்த விவசாயிகளிடம் கமுதி கூட்டுறவுத் துறை கள மேலாளா் பூபதி, மத்திய கூட்டுறவு நிா்வாகிகள், வங்கிக் கிளை மேலாளா் முருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, கள மேளாளா் அலுவலகத்தில் கமுதி வட்டாட்சியா் ஸ்ரீராம், கமுதி காவல் ஆய்வாளா் முகமது இா்ஷாத், விவசாயிகள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் மு.மலைச்சாமி, கமுதி நகா் செயலா் வெள்ளையாபுரம் ஜோதிலிங்கம், நீராவி பகுதித் தலைவா் துரைராஜ், கூட்டுறவுக் கடன் சங்கச் செயலா்கள் கண்ணன், கிருஷ்ணமூா்த்தி, ராமசாமி, ராசு, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் வரும் 14 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் சா்பில் நன்றி தெரிவித்து, கலைந்து சென்றனா்.

