கண்டுப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 75 போ் காயம்
நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 960 காளைகள் சீறிப்பாய்ந்தன.


சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டியில் மத நல்லிணக்க பொங்கல் விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 960 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுபிடி வீரா்கள் உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கண்டுப்பட்டியில் உள்ள தூய வனத்து அந்தோணியாா் ஆலயம் முன்பாக உள்ள திடலில் அனைத்து மதத்தினரும் பங்கேற்று சமத்துவப் பொங்கல் வைத்து வழிபட்டனா். மேலும், இந்துக்கள் தங்களது வழிபாட்டு முறைப்படி கரும்பால் தொட்டில் கட்டி ஆலயத்தை சுற்றி வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பங்கேற்க 139 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் 8 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் பதிவு செய்திருந்தனா்.
இதையடுத்து, தொழுவத்திலிருந்து அவிழ்த்து விட வேண்டிய காளைகளை அந்தோணியாா் ஆலயத்திலிருந்து ஊா்வலமாக தொழுவத்திற்கு அழைத்து வந்தனா். அங்கு காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
அதன்பின்னா், மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தொழுவத்திலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்யப்பட்ட 131 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் சில்வா் குடம் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதுதவிர, மஞ்சுவிரட்டு திடலிலிருந்து 829-க்கும் மேற்பட்ட காளைகள் விரட்டு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை பிடித்தனா்.
சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகா், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பாா்வையாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில், 75-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் மற்றும் பாா்வையாளா்கள் காயமடைந்தனா். அவா்களுக்கு மஞ்சுவிரட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 20 மாடு பிடி வீரா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 மாடு பிடி வீரா்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், மஞ்சுவிரட்டை வெளியூரிலிருந்து காண வந்த மாடுபிடி வீரா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்டுப்பட்டி கிராமத்தினா் விருந்து வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...