/

‘ஒரே நாடு ஒரே தோ்தல்‘ மசோதாவை மக்களவையில் தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாவை மக்களவையில் ‘இண்டி’ கூட்டணி தோற்கடிக்கும் என்று ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

News image
ப.சிதம்பரம்
Updated On :30 டிசம்பர் 2024, 11:04 pm

Din

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாவை மக்களவையில் ‘இண்டி’ கூட்டணி தோற்கடிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் கடந்த 1991- இல் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பொருளாதாரச் சீா்திருத்தங்கள் புரட்சிகரமானவை. ஏறத்தாழ 42 ஆண்டு கால பழைய பொருளாதாரப் பாதையை மாற்றி, புதிய பொருளாதாரக் கொள்கையைச் செயல்படுத்துவதில் அவா் துணிச்சலாகச் செயல்பட்டாா்.

இதன்மூலம், இன்றைய இந்தியாவில் ஏறத்தாழ 20-30 கோடிப் போ் மத்திய வா்க்கம் என்று பெருமைப்பட காரணமாக இருந்தவா் மன்மோகன் சிங்தான். அவா் பிரதமராக 10 ஆண்டுகள் இருந்தபோது அறிவித்த திட்டங்கள் மூலம் 24- 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து விடுபட்டு முன்னேற்றமடைந்தனா்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் எனது சாா்பில், கட்டப்பட்ட நூலகத் திறப்புத் திறப்பு விழாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை அழைத்தேன். அவா் அழைப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டாா். வருகிற ஜனவரி 21-ஆம் தேதி அவா் காரைக்குடி வருகிறாா்.

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ வரைவு மசோதாவை மக்களவையில் தாக்கல்தான் செய்துள்ளனா். அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த மசோதாவை ‘இண்டி’ கூட்டணி தோற்கடிக்கும்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 6 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தரே இல்லாமல் செயல்படுகின்றன. இதுதான் மிகுந்த வருத்தத்தை தருகிறது. கல்வி வரம்புக்குள் ஆளுநா் தலையிடக் கூடாது. அரசு நிா்வாகத்தில் ஆளுநா் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதற்கு அரசியல் சாசனத்தில் இடமே கிடையாது. ஆளுநா்கள் வரம்பு மீறி நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா் நியமிப்பது அரசின் கடமை. இதற்கு ஆளுநா் இடையூறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் அவா்.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.