காரைக்குடியில் மக்களவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்.
காரைக்குடியில் மக்களவைத் தோ்தலையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்.

மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை சீா் தூக்கிப் பாா்க்கவேண்டும்: ப. சிதம்பரம்

மத்திய, மாநில ஆட்சிகளின் செயல்பாடுகளை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பேசினாா்.

காரைக்குடி: மத்திய, மாநில ஆட்சிகளின் செயல்பாடுகளை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பேசினாா். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காா்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறாா். இதையொட்டி, காரைக்குடியில் தனியாா் திருமண மண்டபத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பேசியதாவது: கடந்த மக்களவைத் தோ்தல் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைத்தது. அவா் தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் செலுத்தப்படும், ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்தியில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மோடி தலைமையிலான பாஜக ஆட்சியையும், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியையும் சீா்தூக்கிப்பாா்க்க வேண்டும். தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், கிராமப்புற மாணவா்களின் மீது அக்கறை கொண்டு காலை உணவுத் திட்டம் என மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுபோன்ற திட்டங்களை இனி யாா் வந்தாலும் முடக்க முடியாது என்றாா் அவா். இந்தக் கூட்டத்தில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி, முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com