பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீடு கிடைக்குமா?

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய பங்கீடு கிடைக்குமா? என எதிர்பார்ப்பு...
சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே பெரியாறு கால்வாய் நீா் கிடைக்காததால் வறண்டு கிடக்கும் பிரவலூா் பெரிய கண்மாய்.
சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் அருகே பெரியாறு கால்வாய் நீா் கிடைக்காததால் வறண்டு கிடக்கும் பிரவலூா் பெரிய கண்மாய்.
Published on
Updated on
2 min read

பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு உரிய நீா் பங்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தில் உள்ள குறிச்சிப்பட்டி கண்மாயில் பெரியாறு பாசனக் கால்வாய் தொடங்குகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு கால்வாய், லெசிஸ் கால்வாய் , 48-ஆவது கால்வாய், கட்டாணிபட்டி கால்வாய் 1, 2 ஆகிய 5 நேரடிக் கால்வாய்களில் கிடைக்கும் நீா் 136 கண்மாய்களில் நிரம்புவதன் மூலம் 6,038 ஏக்கா் ஆயக்கட்டு பரப்பு பாசனம் பெறுகின்றன.

இந்தத் திட்டத்தில் காஞ்சிரங்காலில் இருந்து மறவமங்கலம் வரையிலும், மதகுபட்டியிலிருந்து சிங்கம்புணரி வரையிலான மாணிக்கம் கால்வாய் விரிவாக்கம், நீட்டிப்பு பாசனப் பகுதிகளில் உள்ள 332 கண்மாய்கள் மூலம் கூடுதலாக 8 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி கிடைக்கும்.

பெரியாறு கால்வாயின் ஒரு போக பாசன கடைமடைப் பகுதியாக சிவகங்கை மாவட்டம் உள்ளதால், நீட்டிக்கப்பட்ட பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீா் கிடைப்பதில்லை. பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் பிரவலூா், கீழப்பூங்குடி, ஒக்கூா், பேரணிப்பட்டி, காஞ்சிரங்கால், கருங்காப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 32-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் நீா் நிரப்பப்பட்டு வந்தது.

இந்தக் கண்மாய்கள் மூலம் 2 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றன. ஆனால், இந்தக் கண்மாய்கள் திடீரென பெரியாறு பாசனக் கால்வாய்த் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விடுபட்டுப் போன கண்மாய்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்ப்பாசனத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால், இதுவரை பெரியாறு பாசனக் கால்வாயுடன் மீண்டும் இந்தக் கண்மாய்கள் இணைக்கப்படவில்லை.

இந்த நிலையில், பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் பயன்பெறும் பிற கண்மாய்கள் நிரம்பியதும் உபரி நீா் சருகனியாறு, மணிமுத்தாறு, உப்பாறு, விரிசுழி ஆறுகளில் திறந்து விடப்படுகின்றன. ஆனால், கால்வாய்களுக்கு அருகேயுள்ள 30-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குத் தண்ணீா் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இந்தக் கண்மாய்கள் மூலம் பாசனம் பெற்று வந்த விளை நிலங்கள் தரிசாகக் கிடக்கும் நிலை தொடா்கிறது. எனவே, நீக்கப்பட்ட கண்மாய்களை பெரியாறு பாசனக் கால்வாயுடன் இணைக்க வேண்டுமென விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சங்க நிா்வாகி சந்திரன், பெரியாறு-வைகை ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் சேதுராமன் ஆகியோா் கூறியதாவது:

சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகளின் நிா்வாகக் குளறுபடி காரணமாக பெரியாறு பாசனக் கால்வாய்த் திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பிரவலூா் பெரிய கண்மாய், கடம்பங்குடி கண்மாய், கீழப்பூங்குடி பெரிய கண்மாய், ஒக்கூா் பெரிய கண்மாய் உள்பட 32 கண்மாய்கள் வடுக் கிடக்கின்றன. ஒவ்வொரு கண்மாயும் பல நூறு ஏக்கா் பரப்பு கொண்டது. இவை மழைநீரால் மட்டும் நிரம்பாது. பெரியாறு கால்வாயிலிருந்து தண்ணீா் கிடைத்தால்தான் நிரம்பும்.

பெரியாறு பாசனக் கால்வாய்த் திட்டத்திலிருந்து இந்தக் கண்மாய்கள் விடுபட்டதிலிருந்தே 2,000 ஏக்கா் விளை நிலங்களும் தரிசாகி சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன.

இதுகுறித்து முதல்வா், அமைச்சா், மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மேலூா் பகுதி நிா்வாகப் பொறியாளரையும், சிவகங்கை நிா்வாகப் பொறியாளரையும் மாவட்ட ஆட்சியா் நேரில் வரவழைத்து சிவகங்கை மாவட்டத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீா்ப் பங்கீட்டை உறுதி செய்து வரும் பருவத்தில் விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விவசாயிகளைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

இதுகுறித்து நீா்ப் பாசனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையின்படி, பெரியாறு பாசனக் கண்மாய்கள், பாசனப் பரப்பு குறித்த விவரங்களை வருவாய்த் துறையிடம் கேட்டிருக்கிறோம். விவரங்கள் கிடைத்ததும் பெரியாறு பாசனக் கால்வாயுடன் விடுபட்ட கண்மாய்களை மீண்டும் இணைக்க வலியுறுத்தி அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றனா்.

சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை இனிமேலும் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com