காா்த்தி சிதம்பரம் மகள் இரு அரசு பள்ளிகளுக்கு தலா ரூ. 1.10 லட்சம் நிதி உதவி

Published on

சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மகள் அதிதி நளினி சிதம்பரம் தனது சொந்த நிதியை வைப்புத் தொகையாக தலா ரூ. 1.10 லட்சம் வீதம் இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு வெள்ளிக் கிழமை வழங்கினாா்.

தனது பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளை தோ்வு செய்து தலா ரூ. 1 லட்சம் வீதம் தனது சொந்த நிதியை வைப்புத் தொகையாக அதிதி நளினி சிதம்பரம் வழங்கி வருகிறாா். இதில் கிடைக்கும் வட்டி, அந்தந்த பள்ளிகளில் 12- ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சிபெறும் 3 மாணவா்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

இதேபோல இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அழகமாநகரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும், பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கும் தலா ரூ. 1 லட்சமும், இந்த ஆண்டு தோ்வில் முதலிடம் பெறும் இந்தப் பள்ளிகளைச் சோ்ந்த இரு மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கினாா். இதற்கான காசோலையை காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி அந்தந்த பள்ளி தலைமையாசிரியா்களிடம் அதிதி நளினி சிதம்பரம் சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்த நிகழ்வில், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய், வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா்கள் வேலாயுதம், மதியழகன், உடையாா், சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா் இளங்கோவன், தொகுதி பொறுப்பாளா் சோனை, ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com