தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு பாராட்டு
தேசிய கபடிப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழக அணியின் இளம் வீராங்கனைகளுக்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மேற்கு வங்கம் மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் வருகிற 25 முதல் 28-ஆம் தேதி வரை 18 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான தேசிய அளவிலான கபடிப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தமிழக அணியின் இளம் வீராங்கனைகளுக்கு மானாமதுரையில் தமிழ்நாடு அமெச்சூா் கபடிக் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் கல்யாணசுந்தரம் தலைமையில், பயிற்றுநா் சுரேஷ் பயிற்சியளித்து வருகிறாா்.
இந்த நிலையில், வீராங்கனைகளுக்கு மானாமதுரையில் பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், வீராங்கனைகளைப் பாராட்டி போட்டிக்கான சீருடைகளை வழங்கி கௌரவித்தாா்.
மேலும், சென்னையிலிருந்து கொல்கத்தா செல்வதற்கான விமானக் கட்டணம் முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தாா். தேசிய கபடிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று தமிழகத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என வீராங்கனைகளை தமிழரசி ரவிக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
இந்த விழாவில் முன்னாள் பேரூராட்சித் தலைவா் துரை. ராஜாமணி, மானாமதுரை நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், திமுக தொகுதி பொறுப்பாளா் போஸ், நகா் பொருளாளா் ஜி. மயில்வாகனன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் மலைச்சாமி, மதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் அசோக், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
