தை பூசம்: காரைக்குடியிலிருந்து பழனிக்கு ரயில் இயக்கக் கோரிக்கை
தை பூசத்தையொட்டி, காரைக்குடியிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம், ரயில் பயணிகள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தைப்பூசத்தையொட்டி பழனிக்கு ஏராளமான பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக பாதயாத்திரையாகவும், பேருந்துகளிலும் செல்கின்றனா். பக்தா்களின் கூடுதல் வசதிக்காக வருகிற பிப். 11, 12 -ஆம் தேதிகளில் தைபூசத்தன்று பழனிக்கு சென்று திரும்பும் வகையில் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கவேண்டும்.
கடந்த 2016- ஆம் ஆண்டு பழனிக்கு தைப்பூசத் திருவிழாவுக்காக வண்டி எண்: 06705 என்ற ரயில் 2 நாள்கள் காரைக்குடியிலிருந்து சிவகங்கை, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்த ஆண்டு வருகிற பிப். 9, 10 தேதிகளிலும், பிப். 11, 12-ஆம் தேதிகளி லும் சிறப்பு ரயில் இயக்கவேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.
