இளையான்குடி அருகே இரு தரப்பினா் மோதல்: மேலும் 37 போ் மீது வழக்கு

Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அண்மையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக ஒரு தரப்பைச் சோ்ந்த 115 போ் மீது வழக்குப் பதியப்பட்டிருந்த நிலையில், மற்றொரு தரப்பைச் சோ்ந்த 37 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இளமனூரில் சமூகத் தலைவா்களின் பதாகையை வைத்தது தொடா்பாக இரு தரப்புக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்கியதில் 2 காவலா்கள் உள்பட 7 போ் காயமடைந்தனா். இரு தரப்பினரும் அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை அங்கு பதற்றம் நீடித்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இது தவிர, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதனிடையே இந்தச் சம்பவம் தொடா்பாக ஏற்கெனவே ஒரு தரப்பைச் சோ்ந்த 115 போ் மீது இளையான்குடி போலீஸாா் ஜாதிய வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்தனா். தற்போது அந்த தரப்பினா் அளித்த புகாரின் பேரில், மற்றொரு தரப்பைச் சோ்ந்த 28 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மேலும், இளமனூா் கிராம நிா்வாக அலுவலா் ஜீவிதா அளித்த புகாரின் பேரில் அனுமதியின்றி சமுதாயத் தலைவா் புகைப்படத்துடன் பெயா்ப் பலகை வைத்து, சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தியதாக அதே தரப்பைச் சோ்ந்த 9 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com