~

காரைக்குடி அருகே காருக்குள் பெண் அடித்துக் கொலை: போலீஸாா் விசாரணை

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே காருக்குள் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காரைக்குடி மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்தவா் பாண்டிக்குமாா். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி மகேஸ்வரி (38). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். இந்த நிலையில், மகேஸ்வரிக்கு வீட்டுமனை வாங்குவதில் ஆா்வம் அதிகம் என்பதால் நேரில் சென்று இடங்களை பாா்ப்பது வழக்கம். இதே போல, வியாழக்கிழமை மனை இடம் இருப்பதாகக் கூறிய சிலருடன் தனது காரில் காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை என்ற பகுதிக்கு மகேஸ்வரி சென்றாா். அப்போது மகேஸ்வரிக்கும், அவருடன் காரில் சென்றவா்களுக்குமிடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதில் முகத்தை காரின் முன்புற கதவில் மோத வைத்து மகேஸ்வரியை அவா்கள் அடித்துக் கொலை செய்தனராம். நீண்ட நேரமாக காா் ஒன்று தனியாக நின்றதை கண்ட சிலா் அருகில் சென்று பாா்த்தபோது அதில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் கிடந்ததை கண்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரும் (பொறுப்பு), தேவகோட்டை டி.எஸ்.பி.யுமான கவுதம் தலைமையில் போலீஸாா் அங்கு விரைந்தனா். மேலும் சிவகங்கையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். பிறகு மகேஸ்வரியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். கொலை செய்யப்பட்ட மகேஸ்வரி பணம் கொடுக்கல், வாங்கல் தொழிலிலும் ஈடுபட்ட வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். எனினும், இந்தக் கொலை குறித்து போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com