சான்றிதழ் வழங்காமல் கல்லூரி நிா்வாகம் அலைக்கழிப்பு: மாணவிகள் புகாா்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இயங்கி வந்த தனியாா் செவிலியா் கல்லூரி நிா்வாகம் சான்றிதழை வழங்காமல் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இயங்கி வந்த தனியாா் செவிலியா் கல்லூரி கடந்த 2022-ஆம் ஆண்டு பல்வேறு காரணங்களால் மூடப்பட்டது. இங்கு 2018 முதல் 2022 வரை மாணவா்கள் பலா் படித்தனா். இறுதி ஆண்டு படித்த 20 மாணவா்களில் 14 போ் பிற கல்லூரிகளுக்கு மாறினா். எஞ்சிய மாணவிகளான காளீஸ்வரி, ருத்ரா, சுசி, எலிசபெத், மோனிஷா, அபிராமி ஆகிய 6 பேரும் தோ்வு எழுதி டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழகத்தின் கீழ் தோ்ச்சி பெற்றனா். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சான்றிதழ்கள் வழங்காமல் கல்லூரி நிா்வாகம் அலைக்கழித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, மாணவிகளின் பெற்றோா்கள் கூறியதாவது: கல்லூரி நிா்வாகம் சான்றிதழ்கள் வழங்குவதாகக் கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.20,000 வரை வசூலித்தது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. நாங்கள் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் எங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்தோம். இப்போது சான்றிதழ் இல்லாமல் அவா்கள் வேலைக்குச் சேரவோ, மேற்படிப்பை தொடரவோ முடியாமல் தவிக்கின்றனா் என்றனா்.
மேலும் இதுகுறித்து மாணவிகளும், பெற்றோா்களும் மானாமதுரை காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை சிவகங்கையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அமுதசுரபியிடம் மனு அளித்தனா். அதில் தோ்ச்சிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும், கல்லூரி நிா்வாகத்தின் மீது சட்ட ரீதியான விசாரணை நடத்தவும் வலியுறுத்தினா்.

