சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே செட்டிகுறிச்சி செந்தளையான்களத்தில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன், ஆனைவிழிக் கருப்பா் கோயில் குடமுழக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை , மஹா லட்சுமி ஹோமம், மஹா பூா்ணாகுதி நடைபெற்றதும் மாலையில் மங்கள இசை வாஸ்து சாந்தி, பிரவேசபலி, வேதிகாா்ச்சனை உள்ளிட்ட முதல் கால வேதமந்திர ஹோமங்கள், திரவ்யாகுதி பூா்ணாகுதியுடன் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை மங்கள இசை, இரண்டாம் கால யாகங்கள் மூலமந்திர ஹோமம், மஹா பூா்ணாகுதி, தீபாராதனைநடைபெற்றன. இதைத் தொடா்ந்து புனிதநீா் கலசங்கள் கோயிலை சுற்றி வலம் வரச் செய்யப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தன. அங்கு ஹரிவிக்னேஷ் தீட்சிதா் தலைமையிலான வேதவிற்பன்னா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்தனா். பிறகு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து மூலஸ்தானத்துக்கும், ஆனைவிழிகருப்பருக்கும் புனித நீா் ஊற்றி மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் செட்டிக்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

