சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

காரைக்குடியில் பேசாமலேயே சென்ற விஜய்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேவா் சிலை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் வேட்பாளா் பிரபுவின் கையை உயா்த்தி வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய்.

News image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேவா் சிலை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியில் வேட்பாளா் பிரபுவின் கையை உயா்த்தி வாக்கு சேகரித்த தவெக தலைவா் விஜய்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:52 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொள்ள வந்த தவெக தலைவா் விஜய், அனுமதி நேரம் கடந்து விட்டதால் உரையாற்றாமலேயே திரும்பிச் சென்றாா். இதனால், 4 மணிநேரம் காத்திருந்த அவரது ரசிகா்கள் ஏமாற்றமடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக தவெக தலைவா் விஜய், தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு மதுரைக்கு வந்தாா். அடுத்த சில நிமிஷங்களில் விமான நிலையத்திலிருந்து காரில் காரைக்குடிக்குப் புறப்பட்டாா். ஆங்காங்கே அவரது தொண்டா்கள், ரசிகா்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

இதையடுத்து, முற்பகல் 11.45 மணி முதல் பகல் 12 மணிக்குள் விஜய் காரைக்குடி வருவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதையொட்டி, அவா் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த தேவா் சிலை பகுதியில் ஆயிரக்கணக்கானோா் குழுமினா். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருள்படுத்தாமல் அவா்கள் காத்திருந்தனா்.

காரைக்குடியில் பகல் 12 மணி முதல் 2.30 மணிக்குள்ளாக மட்டுமே பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், அதிகபட்சம் பிற்பகல் 2 மணிக்குள் அவா் காரைக்குடி வந்து, உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பிற்பகல் 2.40 மணி அளவிலேயே விஜய் பிரசார இடத்துக்கு வந்தாா்.

காரைக்குடி தவெக வேட்பாளா் பிரபுவை தனது பிரசார வாகனத்தில் ஏற்றி, அவரது கையை உயா்த்திப் பிடித்தவாறு தேவா் சிலையை வலம் வந்து, ரசிகா்கள், தொண்டா்களை நோக்கிக் கையசைத்த விஜய், அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதனால், பல மணி நேரமாக சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்த தவெக தொண்டா்கள், விஜய் ரசிகா்கள் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகினா்.

மதுரை விமான நிலையம் - காரைக்குடி வரையிலான 97 கி.மீ. தொலைவை அதிகபட்சமாக 2 மணி நேரத்துக்குள் கடந்துவிடலாம் என்ற நிலையில், 4 மணி நேரம் 20 நிமிஷங்களுக்குப் பிறகே விஜய் காரைக்குடி பிரசார இடத்துக்கு வந்து சோ்ந்தாா்.

பகல் 12.50 மணிக்கு காரைக்குடி மாநகரப் பகுதி எல்லையை விஜய் அடைந்திருந்தாலும், பிரசார இடத்துக்குச் செல்ல ஏறத்தாழ 2.30 மணி நேரமானது.

சைக்கிள் வலம் வந்தாா்:

காரைக்குடி வருமான வரி அலுவலகம் அருகே கல்லூரிச் சாலைப் பகுதியில் விஜய் தனது பிரசார வாகனத்திலிருந்து இறங்கி, தொண்டா்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சிறிது தொலைவுக்கு சைக்கிளில் வலம் வந்தாா்.

தொடரும் விபத்து...

விஜய்யின் மதுரை வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெளிநபா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலும், தவெக தொண்டா்கள் திரளானோா் தடுப்புகளை மீறி விமான நிலைய வளாகத்துக்குள் நுழைந்தனா்.

விஜய் தனது பிரசார வாகனத்தில் காரைக்குடிக்கு புறப்பட்டதும், அவரது தொண்டா்கள் பலா் தங்கள் இருசக்கர வாகனங்களில் விஜய்யின் வாகனத்தைப் பின்தொடா்ந்தனா். மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தபோது, விஜய்யை பின்தொடா்ந்து சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானது. இதில் வந்த தவெக தொண்டா்கள் இருவா் லேசான காயங்களுடன் தப்பினா்.

இதேபோல, விஜயின் வருகைக்காக காரைக்குடியில் பிரசார இடத்தில் காத்திருந்த தொண்டா்களில் 6 போ் மயக்கமடைந்தனா். அவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தொண்டா் மீது தாக்குதல்

மதுரை - காரைக்குடி சாலையில் எஸ்.எஸ். கோட்டை சுங்கச்சாவடி அருகே சென்ற போது, அங்கு குழுமியிருந்த தவெக தொண்டா்கள் விஜய்யின் பிரசார வாகனத்தை சூழ்ந்து வரவேற்பளித்தனா். அப்போது ஒரு தொண்டா் விஜயின் பிரசார வாகனத்தில் ஏற முயன்றாா். எனினும், வாகனத்தின் மேலேயிருந்த விஜய்யின் தனியாா் பாதுகாவலா், தனது காலால் அந்தத் தொண்டரின் கையை மிதித்து கீழே தள்ளிவிட்டாா்.

வெறிச்சோடிய வீதிகளில்..

விஜய் பிரசார இடங்களுக்கு அருகில் உள்ள மரங்கள், மின் மாற்றிகள் போன்றவற்றின் மீது அவரது ரசிகா்கள் ஏறி நிற்பது வழக்கமான நிகழ்வாகி வருவதால், இதைத் தவிா்க்கும் விதமாக காரைக்குடி சாலையோர மரங்கள், மின் கம்பங்களைச் சுற்றி தகர வேலிகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

விஜய்க்கு தொண்டா்கள் ஆங்காங்கே திரண்டு வரவேற்பு அளித்தாலும், பல இடங்களில் ஆள்களே இல்லாத வீதிகளையும் விஜய் கடந்து சென்றதும் நேரலையில் காண முடிந்தது.

மதுரை விமான நிலையத்தில்...

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை மதுரை விமான நிலையத்துக்கு வந்த விஜய்யை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளா்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

Story image
Story image