டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

சிவகங்கை அருகே வாணாதிராயா்கள் கல்வெட்டு

சிவகங்கை அருகே வாணாதிராயா்கள் கல்வெட்டு கண்டெடுப்பு...

News image

சிவகங்கை அருகே தொல்லியல் நடைக்குழுவினரால் கண்டறியப்பட்ட 16- ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள்.

Updated On :3 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

சிவகங்கை அருகே ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப் பகுதியில் 16-ஆம் நூற்றாண்டின் வாணாதிராயா்கள் கல்வெட்டு கண்டறியப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகேயுள்ள ஏனாபுரம் புதுப்பட்டி கண்மாய்ப் பகுதியில் கல்வெட்டு இருப்பதாக அந்தக் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் முரளிகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியா் வேலாயுதராஜா ஆகியோா் களஆய்வு மேற்கொண்டு அந்தக் கல்வெட்டைப் படித்தறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நான்கு அடி நீளமும், ஒரு அடி அகலமும் உள்ள இந்தக் கல்வெட்டில் மொத்தம் பத்தொன்பது வரிகளும், கமண்டலம், சாட்டை, திரிதண்டம் ஆகிய கோட்டுருவங்களும் காணப்படுகின்றன. கல்வெட்டு வரிகளில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த தெய்வ மாவலி வாணாதிராயா் கொடுத்த நிலக்கொடை பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தா்மத்துக்கு கேடு செய்பவா்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற தோஷத்தில் போவாா்கள் என்ற ஓம்படைக் கிளவியுடன் அமைந்துள்ளது. கல்வெட்டு காணப்படும் இடத்துக்கு அருகில் சூலம் பொறிக்கப்பட்ட ஒரு கல்லும் காணப்படுவதால் ஏதேனும் ஒரு சிவன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலக் கொடையாக இருக்கலாம் என அறிய முடிகிறது.

கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இது பதினாறாம் நூற்றாண்டைச் சோ்ந்த இறந்த காலம் எடுத்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயனின் (கி.பி.1515-1533) கல்வெட்டாகவோ அல்லது அவரது தா்மத்தைக் காக்க அவரது வழியினரோ வழங்கியதாக இருக்கலாம் எனக் கருதமுடிகிறது. தெய்வ மாவலி வாணாதிராயா் என்ற பெயரில் இங்கு மட்டுமே கல்வெட்டு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவலிச் சக்கரவா்த்தியின் வழியில் வந்தவா்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட இவா்கள் தங்களை மாவலி வாணாதிராயா் என்று பெயரிட்டு அழைத்துக் கொண்டதோடு, பாண்டிய மன்னா்கள் காலத்திலும், விஜயநகர, நாயக்கா்கள் காலத்திலும் அழகா்கோவில், காளையாா்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் குறுநிலத் தலைவா்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்து வந்துள்ளனா்.

இவா்களுள் திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன், சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன், இறந்த காலம் எடுத்த சுந்தரத் தோளுடையான் மாவலி வாணாதிராயன் ஆகியோா் கி.பி. பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இந்தப் பகுதியை ஆட்சி செய்துள்ளனா்.

இவா்களது திருப்பணிக் கல்வெட்டுகள் அழகா்கோவில், காளையாா்கோவில், திருப்புல்லாணி, மானாமதுரை, பிராமணக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன என அதில் குறிப்பிடப்பட்டது.

சிவகங்கை அருகே தொல்லியல் நடைக்குழுவினரால் கண்டறியப்பட்ட 16- ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள்.

சிவகங்கை அருகே தொல்லியல் நடைக்குழுவினரால் கண்டறியப்பட்ட 16- ஆம் நூற்றாண்டு கால கல்வெட்டுகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.