மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

1,100 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு...

'பள்ளியில் படிக்கும்காலத்தில், ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி கோயில் சுவர்களில் கல்வெட்டுகளைப் பார்க்கும்போது, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:01 am IST

பொ.ஜெயச்சந்திரன்

'பள்ளியில் படிக்கும்காலத்தில், ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி கோயில் சுவர்களில் கல்வெட்டுகளைப் பார்க்கும்போது, அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியும் ஆர்வம் ஏற்பட்டது. யாருடைய உதவியும் இல்லாமல் படிக்க முயற்சித்தேன்.

தொடர் முயற்சியால், சில ஆண்டுகளில் ஓரளவுக்கு அவற்றைப் படிக்க முடிந்தது' என்று கூறும் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத் தலைவர் கரு.இராசேந்திரன், தனது முயற்சியால் 1100 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளார். புதுக்கோட்டை மேலப்பனையூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், எண்பத்து ஏழு வயதிலும் ஓய்வின்றி களப் பணியாற்றி வருகிறார்.

அவரிடம் பேசியபோது:

'வெ.கருப்பையா-எழும்பாயி தம்பதிக்கு மகனாக 1939-ஆம் ஆண்டில் பிறந்தேன். மேலப்பனையூர் ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது, இளைஞர் மன்றம் நடத்திய குறு நாடகத்தில் புதுக்கோட்டை மன்னராக நடித்தேன். பனையப்பட்டி பள்ளியிலும், இராங்கியத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்பாள் உயர்நிலைப் பள்ளியிலும் படிக்கும் காலத்தில் 'பராசக்தி' நாடகத்தில் ஞானசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தேன். கால்பந்தாட்டப் போட்டியிலும் சிறந்து விளங்கினேன்.

குழிபிறை மு.சித.ராம.ராமனாதன் பள்ளியில் 10, 11-ஆம் வகுப்புகள் படிக்கும்போது மாணவர் மன்றச் செயலாளராக இருந்தேன். திருக்குறள் போட்டியில் 100 திருக்குறளை ஒப்பிவித்து, முதல் பரிசைப் பெற்றேன்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்து, 1964-ஆம் ஆண்டில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். 1998-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன். ஆசிரியர் அமைப்புகள், மேலப்பனையூர் முத்தமிழ் மன்றத்தில் பங்களிப்பு செய்தேன். பணி ஓய்வு பெற்ற பிறகும், 1999-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றேன்.

கல்வெட்டு ஆய்வு: புதுக்கோட்டையில் உள்ள கல்வெட்டுகள் குறித்து 1929-இல் புதுக்கோட்டை அரசாங்கம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் நான் அறிந்த, பார்த்த கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை ஒப்பிட்டு அறிந்தேன். புதியதாக இருப்பின், தமிழ்நாடு தொல்பொருள் துறைக்குத் தகவல் தெரிவிப்பேன். தொல்லியல் துறையிலிருந்து முனைவர் சு.இராசகோபால் ஆய்வுக்கு வரும்போது, அவரோடு சென்று கல்வெட்டு படிப்பதைக் கவனிப்பேன்.

கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளில் ஈடுபட்ட தொடக்கக் காலத்தில் சைக்கிளில் சென்றேன். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 50 கி.மீ. தொலைவுகூட பயணம் செய்திருக்கிறேன். சில இடங்களுக்கு மாட்டு வண்டிகள், கப்பல்களில்கூட சென்றுள்ளேன். வெளிநாடுகளுக்கு விமானத்தில் சென்றும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

கல்வெட்டை கண்டுபிடித்தபோது, அதனை படி எடுப்பதற்குரிய பிரஸ், மை போன்ற பொருள்களை முனைவர் சுப்பராயலு தன்னுடைய சொந்த செலவில் வாங்கி அளித்தார். இதுவரைக்கும் 1,100 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்துள்ளேன். நான் கண்டுபிடித்த கல்வெட்டுகள் 'புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் ஆண்டுதோறும் நடத்தும் கல்வெட்டுப் பயிற்சியில், 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து இலவசப் பயிற்சி அளித்து வருகிறேன். முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் ஆலோசனை, கருத்தியல் கற்றுக் கொடுத்து வழிகாட்டுகிறேன்.

நூல்களும், சுவடிகளும்..: மேலப்பனையூர் சொ.வெள்ளைச்சாமி தேவர்-இந்திரா தம்பதியினர் 80 -ஆம் ஆண்டு நிறைவு மலர், 2012-ஆம் ஆண்டில் மேலப்பனையூர் ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி கோயில் குடமுழுக்கு மலர், பனையூர் சிவன் கோயிலின் வனப்பும் வரலாறு, 2014-இல் புள்ளான்விடுதி கமலாயி-திரெளபதி அம்மன் கோயில் தல வரலாறு நூல், 2017-இல் மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று பேரவை சார்பில் 'புதுக்கோட்டை வட்டார புதிய கல்வெட்டுகள்' என்ற நூல், 2019-இல் 'புதுக்கோட்டை மறவர் செப்பேடு' உள்ளிட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன். 'புதுக்கோட்டை மாவட்ட புதிய கல்வெட்டுகள்', 'வாசிக்க வேண்டிய வரலாறு' ஆகிய நூல்களை விரைவில் வெளியிட இருக்கிறேன்.

மேலப்பனையூர் ஓலைச்சுவடி காட்டும் கானாடு கோனாடு எல்லைச் சண்டை, பனையூர் குளமங்கலம் ஓலைச்சுவடிகள் காட்டும் சமுதாயமும் நிலவுடைமைக் காணியும், மேலப்பனையூர் ஸ்ரீஅகிலாண்டீஸ்வரி பேரில் ஊஞ்சல் - திருவாதிரை திருவிழா, 1811, 1938-ஆம் ஆண்டுகளில் புதுக்கோட்டை மன்னருக்கு தஞ்சாவூர் ஆட்சியாளராக இருந்த பிளாக் பெண் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும், நூற்றுக்கணக்கான ஓலைச்சுவடிகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன்.

விருதுகள்: புதுக்கோட்டை குழிபிறை கவின் கலை மன்றத்தால் 'பாராட்டும் வரலாற்று வித்தகம்', புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பில் 'கல்வெட்டுச் சுடர்', மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று பேரவை சார்பில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உள்ளிட்ட விருதுகளையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை தலைமையில் பாராட்டு விழா, புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆவண கருத்தரங்கில் தொல்லியல் கழகம் சார்பில் பொற்கிழி, தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலுக்கு ஓலைச்சுவடிகள் அளித்தமைக்காக நூல் நிலையத்தால் பாராட்டு விழா உள்ளிட்ட பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஆ.மணிகண்டன், முனைவர் ராஜா முகமது, தொல்லியல் ஆய்வாளர்கள் சாந்தலிங்கம், ராஜவேலு, பாலமுருகன், கோவிந்தராசு உள்ளிட்டோர் எனது பணிகளுக்கு உறுதுணையாக இருக்கின்றனர்' என்கிறார் கரு.இராசேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.