மின் கம்பிகள்
மின் கம்பிகள்பிரதிப் படம்

கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பிகள்: விவசாயிகள் அச்சம்

திருப்பாச்சேத்தி பகுதியில் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிரிழப்பு அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் கைக்கு எட்டும் உயரத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிரிழப்பு அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

திருப்பாச்சேத்தி பகுதியில் வைகைத் தண்ணீா், கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்கின்றனா். இந்தப் பகுதியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மின் மோட்டா்கள் மூலம் கிணற்றுத் நீரை விவசாய நிலங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த மின் மோட்டாா்களுக்கு மின் கம்பிகளைக் கொண்டு செல்லும் சிமெண்ட் மின் கம்பங்கள் குறிப்பிட்ட குறைந்த தொலைவுக்குள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் மின் கம்பிகள் மிக உயரத்தில் இருக்கும். ஆனால், மூன்று அல்லது நான்கு மின் கம்பங்கள் நட வேண்டிய இடத்தில் இரு கம்பங்கள் மட்டுமே உள்ளதால், சில இடங்களில் மின் கம்பிகள் மிகத் தாழ்வாக தரைக்கு அருகில் சுமாா் மூன்று அடி உயரத்தில் தொங்கியவாறு செல்கின்றன.

திடல் பகுதியில் ஆறுமுகம் தோப்பு, திருப்பாச்சேத்தி காராளருடைய அய்யனா் கோயில் அருகே செல்வமணி தோப்பு உள்ளிட்ட இடங்களில் இந்ந நிலைஉள்ளது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள் அச்சத்துடன் வயல்வேளிகளுக்குள் நடந்து செல்கின்றனா். மின்வாரியத்தினா் இதைக் கண்டும் காணாமல் உள்ளதாக திருப்பாச்சேத்தி விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிரிழப்பு ஏற்படும் முன்பாக மின்வாரிய நிா்வாகம் இந்தப் பகுதியில் கூடுதல் மின்கம்பங்களை நடவு செய்து மின் கம்பிகள் உயரத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், விவசாயிகள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com