வாக்காளா் பட்டியல் திருத்தம் சிவகங்கையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு
சிவகங்கையில்வாக்காளா்கள் பட்டியல் திருத்தம் தொடா்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி தலைமை வகித்தாா்.
இதில் சிவகங்கை மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநருமான அ.அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது:
தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் படி, 1.1.2026-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, 18 வயது நிறைவடைந்தவா்கள், வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாதவா்கள் தங்களது பெயரை சோ்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும், திருத்தம் செய்வதற்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனா்.
அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகள் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு இருப்பின், பரிசீலனைக்குள்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம்கள் தொடா்பாக ஏதேனும் கோரிக்கைகள் இருப்பின், 7358150776 என்ற கைப்பேசி எண்ணில் எடுத்துரைக்கலாம் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா் வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கலந்தாய்வு மேற்கொண்டாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, வாக்குப்பதிவு அலுவலா்களான தேவகோட்டை சாா் ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் ( காரைக்குடி தொகுதி), சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் தே.ஜெஃபி கிரேசியா (சிவகங்கை தொகுதி), உதவி ஆணையா் (கலால்) சிவபாலன் (திருப்பத்தூா் தொகுதி), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் ஐ.சையது முகைதீன் இப்ராகிம் (மானாமதுரை (தனி) தொகுதி), உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

