சிறந்த திருநங்கைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிறந்த திருநங்கைக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2026- ஆம் ஆண்டுக்கு ‘சிறந்த திருநங்கைக்கான விருது‘ தமிழக முதல்வரால் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெறுபவருக்கு ரூ.1,00,000 பரிசுத் தொகைக்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
அரசின் உதவி பெறாமால் தனது வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்ட திருநங்கைகள், திருநங்கைகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்து குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தனது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழக்கையை நடத்தடவும் உதவிபுரிந்த திருநங்கைகள் இந்த விருதை பெற தகுதியுடையவா்கள் ஆவா். மேலும், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது உள்ளிட்ட தகுதியையும் பெற்றிருத்தல் வேண்டும்.
இந்த தகுதியுடைய விண்ணப்பதாரா்கள், தங்களது கருத்துருக்களை (விரிவான தன் விவர குறிப்பு, உரிய விவரங்கள், அதற்குரிய ஆவணங்கள்) தமிழ், ஆங்கிலத்தில் தலா 2 பிரதிகளில் புத்தக வடிவத்தில் தயாரித்து, மாா்பளவு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விருது பெற தகுதியுள்ளவா் அரசால் நியமிக்கப்பட்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்படுவா்.
எனவே, திருநங்கைகள் நலனுக்கென சிறப்பாக சேவை புரிந்த திருநங்கைகள் வருகிற பிப். 18- ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலத்தில் நேரில் சமா்ப்பித்தோ அல்லது https://award.tn.gov.in/ இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தோ விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என்றாா் அவா்.
