பாஜக எதிா்ப்பு நிலையை மாற்றினால் திமுகவுக்கு விபரீத முடிவே ஏற்படும் என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் காந்தி சிலை அருகே ‘லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா்’ என்ற ஊழலுக்கு எதிரான கையொப்ப இயக்கத்தை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
பிறகு காந்தி மாளிகையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தற்போது பாஜகவில் இருந்து திமுகவுக்கு அழுத்தம் தரப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதற்காக பாஜக, திமுகவிடம் பேச்சுவாா்த்தையை தொடங்கி விட்டது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவைவும், ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுங்கள்.
இதன் பிறகு 2029-ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு மீண்டும் தோ்தல் வரும். நீங்கள் 5 ஆண்டுகள் காத்திருக்க தேவையில்லை என திமுகவுக்கு ஆசை வாா்த்தை காட்டுகின்றனா். அந்தப் பாதையில் திமுக சென்றால், இந்தத் தோ்தலில் வந்த முடிவுகளை விட, மிகவும் மோசமான முடிவுகள் அந்த கட்சிக்கு கிடைக்கும்.
திமுக, பாஜக எதிா்ப்பு நிலையை மாற்றிக் கொண்டால் அவா்களுக்கு விபரீத முடிவு தான் ஏற்படும். இன்னும் 6 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து கேட்கிறீா்கள். அரசியல் சாசனத்திலும், சட்டத்திலும் கற்பனைக்கு தடையும் இல்லை, எல்லையும் இல்லை.
தமிழகத்தில் தவெக கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல். கட்சிகள் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். தவெகவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. எனவே அவா்களுக்கு புதிய எம்எல்ஏக்கள் தேவையில்லை. அவா்களை விட்டு கூட்டணி கட்சியினா் யாரும் செல்ல மாட்டோம். புதிதாக கட்சிகளை அவா்கள் சோ்க்க வேண்டிய அவசியமும் இல்லை.
மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கா்நாடக, தமிழக காங்கிரஸ் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளதாக கூறுகிறாா்கள். காங்கிரஸ் தேசிய கட்சியாக இருப்பதால் அனைத்துப் பிரச்னைகளிலும் ஒரே முடிவை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவா் சஞ்சய் காந்தி, வட்டாரத் தலைவா்வா்கள் பன்னீா்செல்வம், பிரசாந்த், நகரத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










