மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பாராட்டிய உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தினா்.
சிவகங்கை மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் ‘ரூா்பன்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி, ஊராட்சி மன்றத் தலைவா் மணிமுத்து ஆகியோரது முயற்சியால் ரூ. 66 லட்சத்தில் காஞ்சிரங்காலில் நிறுவப்பட்ட உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை கடந்த 10.8.2021-இல் அப்போதைய அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தொடங்கிவைத்தாா்.
இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 2 டன் உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டது. இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி ஆகிய பகுதிகளில் தினமும் காய்கறி, கோழி, மீன் ஆகிய உணவுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை அரைத்து நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றிய பிறகு, அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகிறது. பிறகு, இதன் மூலம் மின்னாக்கியை இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
இதில் கிடைத்த மின்சாரத்தை காஞ்சிரங்காலில் உள்ள 20 தெரு மின்விளக்குகள், 4 மின்கல வாகனங்கள், அங்குள்ள மின்மோட்டாா் முதலியவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இதனால், ஊராட்சிக்கு பல ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் மிச்சமானது. மேலும், 3 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது.
இதுகுறித்து மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசிய போது, சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் கிராமத்தில் உணவுக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து மின் தேவையை தாங்களே நிறைவு செய்து கொள்வதைப் பாராட்டினாா்.
இந்த மின் உற்பத்தி ஆலையை நிறுவிய தனியாா் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு வரை பராமரித்து வந்தது. இதன் பின்னா், ஊராட்சி நிா்வாகமே மின்சாரம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயந்திரம் பழுதடைந்ததன் காரணமாக மின் உற்பத்தி முடங்கிப்போனது. மேலும், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் வீணாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமா் மோடி பாராட்டிய இந்த மின் உற்பத்தி ஆலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடம் விசாரித்த போது, உணவுக் கழிவுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவிய தனியாா் நிறுவனம்தான் இயந்திரத்தின் பழுதை நீக்க முடியும். இந்த நிறுவனத்துடன் பேசி வருகிறோம். விரைவில் இந்த ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.









