சுருளி அருவியில் வாகனங்களுக்கு காலாவதியான டோக்கன் கொடுத்து பணம் வசூல் செய்ததாக கூறி அணைப்பட்டியைச் சேர்ந்த முருக பக்தர்கள் கட்டண வசூல் மையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி நுழைவுப்பகுதியில் சுருளிப்பட்டி ஊராட்சியால் நிர்வகித்து வரும் வாகன நுழைவு கட்டண மையம் உள்ளது. இதில் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10ம், லாரி, பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கு ரூ.60ம் கட்டண வசூல் செய்கின்றனர்.
புதன்கிழமை அணைப்பட்டியைச் சேர்ந்த பழனி பாதயாத்திரை முருக பக்தர்கள் குழுவினர், விரதம் முடித்து மாலை கழற்றுவதற்காக சுருளி அருவிக்கு முப்பது இருசக்கர வாகனங்கள், லாரியில் ஆண், பெண் பக்தர்கள் வந்தனர்.
இவர்களிடம், இருசக்கர வாகனத்திற்கு நுழைவுக் கட்டணம் பெற்றுக்கொண்டு ஜனவரி 22 ஆம் தேதியிட்ட டோக்கன் கொடுத்துள்ளனர். இதை கவனித்த பக்தர்கள், பழைய டோக்கன் வேண்டாம், புதன்கிழமை தேதியிட்ட (ஜனவரி 23) டோக்கன் தருமாறு கூறி உள்ளனர். நுழைவு கட்டணம் வசூலிப்பவர், புதிய டோக்கன் தரமறுத்ததோடு, அவர்களை அவதூறாக பேசினாராம்.
இதனால் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் முறைகேடு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என முருக பக்தர்கள் கட்டண வசூல் மையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வாகன காப்பகத்தில் உள்ள மற்றொருவர், அவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் புதிய டோக்கன் கொடுத்து அனுப்பினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பழனி பாதயாத்திரைக்குழுவைச் சேர்ந்த அழகர் கூறுகையில், பாதுகாப்பிற்காகத்தான் டோக்கன் எடுக்கிறோம், பழைய டோக்கன் என்றால், வாகனம் காணாமல் போனால் யார் பொறுப்பு என்றார்.
வேலை நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி முறைகேடு செய்பவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







