தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலக அறைகள் மூடப்பட்டன.
தேனி ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் ஒருவருக்கு சனிக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா கட்டுப்பாட்டு அறை தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக அறை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலக அறை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலக அறைகள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.
முதல் தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் 3 நாட்களுக்கு மூடப்பட்டு, 2 மற்றும் 3- ம் தளத்தில் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு அறையில் தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்ட பயிற்சி மருத்துவருடன் சேர்ந்து பணியிலிருந்த அலுவலர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள ஆட்சியர் அறையில் உள் அலங்காரம் மற்றும் மராமத்துப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.