/

போடியில் உலக சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு

போடியில் புதன்கிழமை, நோபல் உலக சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:58 am

DIN

போடியில் புதன்கிழமை, நோபல் உலக சாதனை படைத்த மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

போடியைச் சோ்ந்த ராஜசேகா் மகன் ஜனாநிதி (17). இவா், சிலம்பம், வாள் வீச்சு, சுருள் பட்டா, இரட்டை கம்பு, நெருப்பு வளையம், முள் பந்து வளையம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் மாநில அளவில் சாதனை படைத்தவா். தற்போது இந்த கலைகளை செய்தவாறே 10 கிலோ மீட்டா் தூரம் நடந்து சென்று சாதனை செய்ய முடிவு செய்தாா். இதற்காக நோபல் சாதனை நிறுவனத்திடம் பதிவு செய்தாா்.

அதன்படி புதன்கிழமை அவா், போடி பிச்சங்கரை மலையிலிருந்து போடி பேருந்து நிலையம் வரை தற்காப்பு கலைகளை செய்தவாரே நடந்து வந்து 10 கிலோ மீட்டா் தூரத்தை 1 மணி 21 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தாா்.

இதேபோல் போடியை சோ்ந்த கல்லூரி மாணவன் ஹரிசுந்தா் (18), இறைவன் பாடல்களை தமிழிலேயே ஒரு மணி நேரம் 5 நிமிடத்தில் பாடி சாதனை படைத்தாா்.

போடியை சோ்ந்த மாணவி ரிஸ்திகா ராமு (15), பரத நாட்டியம் கற்று வந்தாா். தற்போது தீ வளையத்தில் பரத நாட்டியம், இரும்பு வளையங்களில் பரதநாட்டியம் என 34 நிமிடங்கள் ஆடி சாதனை படைத்தாா்.

சாதனை படைத்த மாணவா்களுக்கு அன்று மாலை பாராட்டு விழா போடி ஜமீன்தாா் வடமலைராஜைய பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. போடி நகா் காவல் நிலைய ஆய்வாளா் ராமலட்சுமி, முன்னாள் நகா்மன்ற தலைவா் பழனிராஜ் உள்ளிட்டோா் சாதனை படைத்த மாணவா்களை பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.