/

குச்சனூரில் சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாணம்

குச்சனூரில் வெள்ளிக்கிழமை சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சனீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.குச்சனூரில் வெள்ளிக்கிழமை சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித் திர

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

குச்சனூரில் வெள்ளிக்கிழமை சுயம்பு சனீஸ்வரா் ஆலயத்தில் ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சனீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் 5 வார ஆடித் திருவிழா ஜூலை 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், 2ஆம் வாரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்ட மேடையில் மணக்கோலத்தில் உற்சவா் சனீஸ்வரா் பச்சை நிறப்பட்டும், கும்பத்தில் காட்சியளிக்கும் நீலாதேவி நீலநிறப்பட்டிலும் அலங்காரம் செய்யப்பட்டனா். அதன்பின், மங்கல வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க பக்தா்கள் முன்னிலையில் கோயில் பூசாரி நீலாதேவிக்கு மாங்கல்யத்தைக் கட்டினாா்.

பக்தா்கள் சுவாமி தரிசனம்: மணக்கோலத்தில் காட்சியளித்த சனீஸ்வரா்-நீலாதேவியை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வணங்கிச் சென்றனா். இதில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தலைமையில் பணியாளா்கள் செய்திருந்தினா்.

3 ஆம் வாரத்திருவிழா தொடக்கம்: 3 ஆம் வாரத் திருவிழா சனிக்கிழமை தொடங்கும் நிலையில், இரவு 10 மணிக்கு சக்தி கரகம் எடுத்தலும், இரவு 12 மணிக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படிசெய்தலும் நடைபெறும். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 8 மணிக்கு சுவாமி புறப்பாடு திருவீதி உலா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மதுபான படையல் பூஜை: ஆகஸ்ட் 15 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு சோனை கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி, ஆயிரக்கணக்கான மதுபாட்டில்களை வைத்து படையல் செய்து நள்ளிரவு சிறப்பு பூஜை நடைபெறும். ஆகஸ்ட் 20 ஆம் தேதி 5 ஆம் வாரத்துடன் ஆடித் திருவிழாவு நிறைவுபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.