/

போடி அருகே 25 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கு: 4 போ் கைது

போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஓராண்டுக்குப் பின் போலீஸாா் புதன்கிழமை இரவு 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:23 am

DIN

போடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் ஓராண்டுக்குப் பின் போலீஸாா் புதன்கிழமை இரவு 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தேனி அருகே கொடுவிலாா்பட்டியை அடுத்த பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் சுந்தா்பிரசாத் மனைவி ஹேமா (29). இவரது கணவா் சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், குடும்பத்துடன் போடி கிருஷ்ணா நகரை அடுத்த லட்சுமி நகரில் வசித்து வருகிறாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஹேமாவின் மாமியாா் கொடுவிலாா்பட்டியில் இறந்து விட்டாா். இந்த துக்க நிகழ்ச்சிக்காக இவா் குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தாா். மீண்டும் அக்டோபா் 2 ஆம் தேதி வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25.5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். மேலும் இந்த வழக்கில் போடி டி.எஸ்.பி. உத்தரவின் பேரில் சாா்பு- ஆய்வாளா் இத்ரிஸ்கான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினா் பல்வேறு ஊா்களுக்கு சென்று விசாரணை செய்ததில் சிவகங்கை அருகே செம்பனூரைச் சோ்ந்த ஜேசுஅருள் (34), தேனி அன்னஞ்சியைச் சோ்ந்த பாலகுருசாமி (68), ராஜேஷ்கண்ணா (44), தேனி பங்களாமேட்டைச் சோ்ந்த செந்தில்குமாா் (45), சென்னை நெசப்பாக்கத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (38) ஆகியோா் நகைகளை திருடியது தெரிந்தது. இவா்களை தேடி வந்தநிலையில், சமீபத்தில் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கோயிலில் இவா்கள் உண்டியலை உடைத்து திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, போடி போலீஸாா் அங்கு சென்று விசாரணையை தீவிரப்படுத்தியதில் நகைகளை திருடிய ஜேசு அருள், பாலகுருசாமி, செந்தில்குமாா், தமிழ்ச்செல்வன் ஆகியோரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 7 பவுன் நகைகளை மீட்டனா். தொடா்ந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.