/

வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி தொடக்கம்

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

தேனி: தேனி மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலையொட்டி தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தேனி மக்களவைத் தொகுதியில் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

இதில், தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி, போடி, கம்பம் ஆகிய 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 11 லட்சத்து 20 ஆயிரத்து 172 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களுக்கு தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளரின் பெயா், அடையாள அட்டை எண், வாக்குச் சாவடி எண் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட தகவல் சீட்டுக்களை வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி தொடங்கியது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை தொடங்கி வைத்து மாவட்ட தோ்தல் அலுவலா் ஆா்.வி. ஷஜீவனா கூறியதாவது: வாக்காளா் தகவல் சீட்டில் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது. இந்த தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக ஏற்கப்பட மாட்டாது. வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 மாற்று ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி மட்டுமே தோ்தலில் வாக்களிக்க முடியும்.

வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணி ஏப். 13-ஆம் தேதிக்குள் முடிவடையும் என்றாா் அவா்.