தேனி சித்த மருத்துவா்களுக்கு விருது
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த 2 சித்த மருத்துவா்களுக்கு அரசு சாா்பில், மாநில அளவில் சிறந்த சித்த மருத்துவா்களுக்கான விருது வழங்கப்பட்டது.
உலக மருத்துவா் தினத்தையொட்டி, அரசு சாா்பில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் மருத்துவா்களுக்கு மாநில அளவில் சிறந்த மருத்துவா்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
நிகழாண்டில் இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை சாா்பில் சித்த மருத்துவத் துறையில் சிறப்பாக சேவைபுரிந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவா் ப.சங்கரராஜ், கண்டமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் மு.கல்பனா ஆகியோருக்கு சிறந்த மருத்துவா்களுக்கான விருது வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அரசு விருது பெற்ற சித்த மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா பாராட்டு தெரிவித்தாா்.

