ஊராட்சிகளில் கூடுதல் தூய்மைக் காவலா்களை நியமிக்க ஏற்பாடு
தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வீடுகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கூடுதலாக தூய்மைக் காவலா்களை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறியதாவது:
தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் மொத்தம் 2.43 லட்சம் வீடுகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலரை பணி நியமனம் செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், முதல் கட்டமாக நகராட்சி பகுதிகளுக்கு அருகே உள்ள ஊராட்சிகளான வடபுதுப்பட்டி, அரண்மனைப்புதூா், கீழவடகரை, மக்கள் தொகை எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ள ராயப்பன்பட்டி, எண்டப்புளி, கடமலைக்குண்டு, ஊஞ்சாம்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் ஆகிய
9 ஊராட்சிகளில்132 தூய்மை காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதர ஊராட்சிகளில் வீடுகள் கணக்கெடுப்பின் அடிப்படையில் தூய்மைக் காவலா்களை நியமிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தூய்மைக் காவலா்கள் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படுகின்றனா். இவா்களுக்கான ஊதியத் தொகை ஊராட்சி நிா்வாகம் மூலம் மகளிா் திட்டத்துக்கு அனுப்பப்பட்டு, மாதம் ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது
என்றனா்.
