நாகை: ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் வளா்ச்சிப் பணிகள் உள்பட பல்வேறு அம்சங்கள் தொடா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, குடியரசு தினமான திங்கள்கிழமை, நாகை மாவட்டத்தில் உள்ள193 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கூட்டங்களில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை கிராமசபை பாா்வைக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவையும், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்த விவாதங்கள் நடைபெற்றன.
மேலும், தூய்மை பாரத இயக்க திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், உங்க கனவை சொல்லுங்க திட்டம் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் பொதுமக்களிடையே விவாதங்கள் நடைபெற்றன.
கிராமசபைக் கூட்டங்களில், அனைத்து பொதுமக்கள், கிராமத்தைச் சாா்ந்த அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.
இக்கூட்டங்களில் அந்தந்த கிராமங்களில் வளா்ச்சித் திட்டங்கள் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
