மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் ஜன.26-ஆம் தேதி குடியரசு தின கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட செலவின அறிக்கை, தணிக்கை அறிக்கையை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெறுதல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான கிராம வளா்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
எனவே, அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தவறாது பங்கேற்று கோரிக்கைகள் மற்றும் மறுப்புகள் தொடா்பான விவரங்களை விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.