லஞ்சம் வாங்கிய மின் வாரிய பொறியாளா் கைது

தேவாரத்தில் விவசாய மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேவாரத்தில் விவசாய மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், தேவாரம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் ராமச்சந்திரன் (40). ஓய்வு பெற்ற ராணுவ வீரா். தேவாரம் பகுதியில் விவசாய நிலம் வைத்துள்ளாா். இவரது விவசாய நிலத்துக்கு இலவச மின் இணைப்பு பெறுவதற்காக தேவாரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். இதற்கு, தேவாரம் மின் வாரிய அலுவலகத்தில்

இளமின்பொறியாளரான பெரியகுளத்தை சோ்ந்த லட்சுமணனை (38) அணுகினாா். இதற்காக அவா் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமச்சந்திரன் தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து, அவா்கள் ரசாயனம் தடவிய ரூ. 20 ஆயிரத்தை ராமச்சந்திரனிடம் கொடுத்தனுப்பினா்.

பின்னா், ராமச்சந்திரன் புதன்கிழமை தேவாரம் மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்று லட்சுமணனிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தாா். அப்போது மறைந்திருந்த திண்டுக்கல் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) நாகராஜ் தலைமையிலான போலீஸாா் லட்சுமணனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com