கொலை வழக்கில் மளிகைக் கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறை
தேனி: தேனி அருகே சொத்துப் பிரச்னையில் சகோதரியின் கணவரை கொலை செய்த மளிகைக் கடை உரிமையாளருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பெரியகுளம் அருகேயுள்ள சரத்துப்பட்டியைச் சோ்ந்த ஜெயபால் மனைவி தங்கமலை. இவரது சகோதரா் தேனி அருகேயுள்ள சங்ககோணாம்பட்டியைச் சோ்ந்த ஜெயராம் (45). இவா் அதே ஊரில் மளிகைக் கடை வைத்து நடத்தி வந்தாா்.
சங்கோணாம்பட்டியில் தங்கமலைக்குச் சொந்தமான வீட்டுமனையிடம் இருந்தது. ஜெயபால்-தங்கமலை தம்பதிக்கு குழந்தைகள் இல்லாததால், இந்த இடம் தனக்குத்தான் கிடைக்கும் என்று ஜெயராம் நம்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கமலை தனது குடும்பச் செலவுக்காக சங்ககோணாம்பட்டியில் உள்ள தனது வீட்டுமனையிடத்தை விற்பனை செய்தாா். இதையடுத்து, கடந்த 2022, அக்.27-ஆம் தேதி சங்ககோணம்பட்டிக்குச் சென்றிருந்த தனது சகோதரி தங்கமலையிடம், ஜெயராம் வாக்குவாதம் செய்தாா்.
இந்தப் பிரச்னையில் ஜெயபால் குறுக்கிட்டு தனது மனைவிக்கு ஆதரவாக பேசியதால், ஆத்திரமடைந்த ஜெயராம், அவரைக் கத்தியால் குத்தினாா். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயராமை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட பட்டியலினத்தோா், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ஜெயராமுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீா்ப்பளித்தாா்.
