சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடா்ச்சி மலையில் மேகமலை, மகாராஜாமெட்டு உள்ளிட்ட அடா்ந்த வனப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
சுருளி அருவிக்கு மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே முக்கிய நீராதாரமாகும். இதனால், மேகமலை, தூவானம், அரிசிப்பாறை, காப்புக்காடு போன்ற பகுதிகளில் பெய்த பலத்த மழையால் திங்கள்கிழமை அதிகாலை திடீரென சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கம்பம் கிழக்கு வனச் சரகத்துக்கு உள்பட்ட சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காலை 8 முதல் மாலை 4 மணி வரையில் அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
முன்னதாக, அருவிக்குச் செல்லும் மலைச் சாலையில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம், மழைப் பொழிவு, நீா்வரத்து அளவு கண்காணிக்கப்படும்.
இந்த நிலையில், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:
மேற்குத் தொடா்ச்சி மலையில் மழைப் பொழிவு நீடிப்பதால், சுருளி அருவியிலும் வெள்ளப் பெருக்கு நீடிக்கிறது. எனவே, மறுஅறிவிப்பு வரும் வரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனா்.
மழை அளவு (மி.மீ.): தேக்கடி-64.4, முல்லைப் பெரியாறு அணை-30, கூடலூா்-18.4, உத்தமபாளையம்-14.6.

